search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் டி.ஜெயக்குமார்"

    20-வது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் செல்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. #MinisterJayakumar
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஜப்பானில் 22-ந் தேதி முதல் 24-ந் தேதிவரை, 20-வது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) நடத்துகிறது.

    இந்த கண்காட்சியில், மீன்வளத்துறை இயக்குனர் ஜி.எஸ்.சமீரான், ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோருடன் சென்று கலந்து கொள்வதற்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது.

    இந்த பயணத்துக்கு ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும். அவர் சுற்றுலா செல்லும் இந்தக் காலகட்டம். அவரது பணிகாலமாக கருதப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கான சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #TamilnaduHighWays #MinisterJayakumar
    சென்னை:

    மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2012-2013-ம் ஆண்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அனுபவமும், தொழில் நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்க செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி. எம்.சி.) என்ற நடைமுறை உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

    இத்திட்டம் விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திலும் இவ்வாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறையின்படி, ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஐந்து ஆண்டு காலத்திற்கு சாலைகளை அடிப்படை சீரமைத்தல், காலமுறை பழுதுபார்த்தல், சிறு அளவிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், அவசரகால சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிபடுத்துதல், சிறுபாலங்கள் கட்டுதல், பாலங்களை தேவைக்கேற்ப அகலப்படுத்துதல், தடுப்பு சுவர்களை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல்;

    மேலும், சாலை பாதுகாப்பு பணிகளான கிலோ மீட்டர் கற்கள் அமைத்தல், எல்லைக் கற்கள் அமைத்தல், விபத்துகளை தவிர்க்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், உயர்மட்ட பெயர் மற்றும் வழிகாட்டு பலகைகளை அமைத்தல், சாலைகளின் மையத்திலும், ஓரங்களிலும் ஒளிரும் குறியீடுகளை அமைத்தல்,

    சாலை ஓரப்புதர்களை அகற்றுதல், தாழ்வான சாலை ஓரங்களை சீர்செய்தல், சாலைகளின் மையத்தடுப்பாண்களில் சேரும் மண்ணை அகற்றுதல், பாலங்களின் கீழ் தண்ணீர் செல்லும் பகுதிகளில் புதர்கள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுதல், சாலை அமைத்த இடங்களில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசுதல், சாலைகளில் ஏற்படும் மேடுபள்ளங்களை சீர்செய்தல் ஆகிய பல்வேறு பணிகளையும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

    மழைக்காலங்களில் ஏற்படும் அனைத்து வகையான அவசர சாலைப் பணிகளையும் உடனுக்குடன் ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும். இவ்வகையான ஒப்பந்தங்கள் மூலம் சாலைகள் பராமரிக்கப்படுவதால் சாலைகள் செம்மையாகவும், உடனுக்குடன் பழுது நீக்கப்பட்டு, செப்பனிடப்படுகின்றன.

    எனவே மத்திய அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை செயல்திறன் சிறப்பாக உள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டு இருப்பதுடன் பல நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

    ஆனால் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அந்தச் செய்தியில், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 5 கோட்டத்துக்காக ரூ.500 கோடிக்கு பதிலாக ரூ.2,083 கோடி அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நடை முறைக்கு பொருந்தாத ஒரு கற்பனை குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிதி முறைகேடு என்பது தவறான தகவல் ஆகும்.

    அனைத்து பணிகளையும் உள்ளடக்கிய செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், சாதாரண பராமரிப்பு பணிக்கான மனிதவளக்கூறு மதிப்பீட்டை மட்டும் சுட்டிக் காட்டி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி கோட்டத்தில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி.எம்.சி.) மூலம் பணியை மேற்கொள்ளாமல் தனித்தனியாக திட்டப் பணிகள் மூலம் சாலைகளை மேம்படுத்தி இருந்தால் ரூ.278 கோடி நிதி தேவைப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது பி.பி.எம்.சி. மூலம் ரூ.55.46 கோடியை அரசு சேமித்துள்ளது.

    அந்த வகையில் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருது நகர் கோட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூ.527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TamilnaduHighWays #MinisterJayakumar
    மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நிவாரண உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். #TNAssembly #Fishermen
    சென்னை:

    தமிழக சட்டசபையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-

    1991-ம் ஆண்டு இந்தத் துறையின் அமைச்சராக நான் பதவி ஏற்ற காலகட்டத்தில் தமிழகத்தில் 4 ஆயிரம் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மீனவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    அந்த வகையில், தூத்துக்குடியில் கடலரிப்பைத் தடுக்க சுவர் அமைக்கும் பணியை மேற்கொள்ள ஆய்வு நடத்தப்படுகிறது. விழுப்புரம் பொம்மியார்பாளையத்தில் கடற்கரை பாதுகாப்புக்காக தடுப்புச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கடலூர் தாலுகாவில் கடற்கரை பாதுகாப்புப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் நம்பியார்நகரில் சிறிய மீன்பிடி துறைமுகத்தை தன்னிறைவுத் திட்டத்தில் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    செருதூர் மீன் இறங்கு தள முகத்துவாரத்தை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் சுவர் அமைப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும். பழவேற்காடு முகத்துவாரத்தை சுவர் அமைத்து மேம்படுத்துவது குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஆய்வில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

    சென்னை மீன்பிடி துறைமுகத்தில் படகு நிறுத்தும் இடத்தில் இடநெரிசலை குறைப்பதற்காக படகு அணையும் தளம் நீட்டித்து அமைக்கப்படும்.

    பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி திறன் மற்றும் மீன் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக 50 சதவீத மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படும். மிதவைக் கூண்டுகளில் மீன்வளர்ப்புக்குத் தேவையான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்ய, கடல் மீன் குஞ்சு வளர்ப்பகம் அமைக்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட மீனவ மகளிரின் வாழ்வாதாரத்துக்கு கடற்பாசி வளர்ப்பு மற்றும் உபபொருட்கள் தயாரிப்பு அலகு அமைக்கப்படும். காஞ்சீபுரம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

    தனியார் மீன்பண்ணையார்களை ஊக்குவிக்கும் விதமாக மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    சென்னை ராயபுரத்தி உள்ள மத்திய சமையலறைக் கூடத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மீனவ மகளிர் குழுக்கள், தொழில்முனைவோருக்கு கடல் உணவு தயாரிப்பு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

    சென்னை, மதுரையில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும். தூத்துக்குடி, தேங்காய்ப்பட்டணம், குளச்சல், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் கூட்டுறவு கடைகள் அமைக்கப்படும்.


    மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரண உதவித் தொகை, மீன்பிடிப்பில் இறப்பு நேரிட்டால் தரப்படும் ஒரு லட்சம் ரூபாய் இரண்டு லட்சம் ரூபாயாகவும்; கை, கால் இழப்புக்காக தரப்படும் உதவித் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும்; வேறு காயங்களுக்குத் தரப்படும் உதவித்தொகையான ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தரப்படும்.

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்தைச் சுற்றி அமைந்துள்ள 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை மாதவரத்தில் மறுசுழற்சி முறையில் கொடுவா மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் ஒருங்கிணைந்த பல் அடுக்கு நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்ற புதிய தொழில்நுட்பம், மீனவர்களின் மாற்று வாழ்வாதாரத்துக்காக செயல்படுத்தப்படும்.

    பழவேற்காடு ஏரியில் மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில் செயற்கை பவளப்பாறைகள் மற்றும் மீன்களைத் திரட்டும் செயற்கை பாறைகள் நிறுவப்படும். பள்ளிக்கல்வியை தொடர இயலாத, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் திருவள்ளூர், காஞ்சீபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் நவீன மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் மிதவைக் கூண்டில் மீன் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு கூண்டில் ஒரு ஆண்டுக்கு 4 டன் மீன்களை உற்பத்தி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். #TNAssembly #MinisterJayakumar #Fishermen
    ×